குடியரசுத் தலைவர் தேர்தல் வரட்டும்! பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்!! பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!


குடியரசுத் தலைவர் தேர்தல் வரட்டும்! பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்!! பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!


வட இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தின. பாஜகவின் தொடர் வெற்றியால், 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டம் முடியவில்லை என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

 
இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவரை தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். 1971- ஆம் ஆண்டின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு, மாநில சட்டப்பேரவைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகள் இத்தேர்தலில் மதிப்பிடப்படும். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் பாஜகவுக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். 

இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் சமாஜ்வாதி  போன்ற கட்சிகளுக்கு அதிக உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை அதிக எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட பாஜகவுக்கு இல்லை. பாஜகவுக்கு அப்படி இல்லாததால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எளிதாக பாஜக வெற்றி பெற்று விட முடியாது. எனவே, ஆட்டம் இன்னும் முடியவில்லை. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். இதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog